January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதியின் உரைக்கு ஐக்கிய தேசியக் கட்சி பதில்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் நாட்டு மக்களுக்கான உரையில், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான விடயங்களை முன்வைக்கப்படவில்லை என்று, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

நாட்டு மக்கள் மீது குற்றங்களை சுமத்தி, அரசாங்கத்தின் தோல்வியை நியாயப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக அந்த உரை பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது.

கடந்த 25 ஆம் திகதி இரவு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருந்தார். இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நாட்டை முடக்குமாறு சுகாதாரப் பிரிவினர் வழங்கிய ஆலோசனைகளை தட்டிக்கழித்திருந்த ஜனாதிபதி, இப்போது மூன்றாவது கொரோனா அலைக்கான காரணத்தை மக்கள் மீது சுமத்துவதாக ஐக்கிய தேசியக் கட்சி அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தின் தோல்வியால், நாட்டை அடிக்கடி முடக்க வேண்டி ஏற்பட்டதாகவும், இதனால் மக்கள் பெரும் நிதி நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

சுகாதார துறையினரின் ஆலோசனைகளை அப்போதே அரசாங்கம் பின்பற்றியிருந்தால் இந்த நிலைமையை தடுத்திருக்கலாம் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது.

அத்துடன் 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் தவறானவை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2019 இல் நாட்டை புதிய அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் போது 7.6 பில்லியன் டொலர் வெளிநாட்டு நிதி கையிருப்பில் இருந்ததாகவும், ஆனால் அது தற்போது 4 பில்லியன் டொலர் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதியின் முழு உரையிலும் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் இருக்கவில்லை என்று அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.