
வெலிக்கடை சிறைச்சாலையில் இரண்டு நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் இன்று (26) மாலை போராட்டத்தை கைவிட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
மரண தண்டனை கைதியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டதை அடுத்து இந்த போராட்டம் தொடங்கியதாக சந்தன ஏக்கநாயக்க கூறினார்.
வெள்ளிக்கிழமை (24) மஹர சிறைச்சாலையின் மரண தண்டனை கைதிகள் தங்களுக்கான மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக தளர்த்துமாறு கோரி போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இதையடுத்த, வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகளும் அதே கோரிக்கையை முன்வைத்து கூரையின் மேல் ஏறி உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இதனிடையே, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகள் 253 பேரின் தண்டனையை குறைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
இது குறித்த அறிக்கை நீதி அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் மரண தண்டனை கைதிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்று தாம் கோரியுள்ளதா தெரிவித்தார்.