January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை பாராளுமன்ற தேசிய பட்டியலில் பெண்களுக்கு 50 வீதத்தை ஒதுக்குமாறு மகளிர் உறுப்பினர்கள் முன்மொழிவு!

இலங்கையில் பாராளுமன்ற மற்றும் மாகாண சபைகளில் 30% -70% பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் தேர்தல் சட்ட சீர்திருத்தங்களை மெற்கொள்வதற்கான முன்மொழிவை சமர்ப்பிக்க மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றம் முடிவு செய்துள்ளது.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பில் பொருத்தமான சீர்திருத்தங்கள் குறித்த முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையிலான தேர்தல் சட்ட சீர்திருத்தங்கள் தொடர்பான நாடாளுமன்ற தேர்வுக் குழு கோரியுள்ள நிலையிலேயே, இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இதற்கமைய, உள்ளூராட்சி மட்டத்தில் 25% வாக்குகள் மாறாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும், அனைத்து அரசியல் கட்சிகளும் தேசிய பட்டியலில் 50% பெண்களுக்கு ஒதுக்கும் தேர்தல் விதிகளை சேர்க்கவும் எழுத்து பூர்வமான ஒரு முன்மொழிவை மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றம் சமர்ப்பிக்க உள்ளது.

2021 ஜூன் 22 அன்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தலைமையில் மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றம் நடத்திய கூட்டத்தில் இந்த பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரோஹிணி குமாரி விஜெரத்னா, கீதா சமன்மலீ குமாரசிங்ஹ, கலாநிதி ஹரிணி அமரசூரிய, மஞ்சுளா திசாநாயக்க, முதிதா பிரஸான்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.