வவுனியா, ஆசுகுளம் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட யேசுபுரம் பகுதியில் உள்ள சிறிய மலைக்குன்றில் கல்லுடைப்பதால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறித்த மலைக் குன்றில் கல்லுடைப்பதால் பொது மக்களின் வீடுகளில் வெடிப்புக்கள் ஏற்படுவதுடன், எந்தவித அறிவித்தலும் இன்றி வெடி வைத்து கற்களை உடைக்கும் போது அங்கிருந்து சிதறி வரும் கருங்கல் துண்டுகள் அருகில் உள்ள குளத்திலும், வீடுகளிலும் விழுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த இரு தினங்களிற்கு முன்பாகவும் அதிகளவான கற்கள் வந்து விழுந்தமையால் குளத்து பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் சிலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
அத்துடன் அருகில் அமைந்துள்ள விவசாய காணிகளிலும் கற்கள் விழுந்து தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது.
கால் நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும் போதும் கூட அச்சத்துடனேயே பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சுற்று வட்டத்தில் இருக்கும் அனைத்து கிராமங்களுக்கும் குறித்த கற்குவாரியால் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
எனவே கல்குவாரியில் கல் உடைக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பாக அப்பகுதி மக்கள் கடந்த வருடங்களில் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.