மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள பறங்கிக்கமம் பகுதியில் சட்ட விரோதமாக காடுகள் அழிக்கப்படுவதாகவும், பல ஏக்கர் காணிகள் தனி நபர்களாலும் வெளிநாட்டை சேர்ந்தவர்களாலும் அபகரிக்கப்படுவதாகவும் பறங்கிக்கமத்தைச் சேர்ந்த மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களுக்கு அரசாங்கம் விவசாயம் செய்வதற்காக இரு ஏக்கர் காணி வழங்குவதாக தெரிவித்ததை அடுத்து தாம் அதற்கு விண்ணப்பித்ததாகவும், தமக்கோ தமது பிள்ளைகளுக்கோ இதுவரையில் காணி வழங்கப்படவில்லை எனவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
தமக்கு விவசாய காணி வழங்காவிட்டாலும், வாழ்வதற்கே தற்போது காணி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக பறங்கிக்கமம் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு தமது பகுதிக்கு அருகில் உள்ள காணிகள் வழங்கப்படுவதாகவும், தமது பிள்ளைகள் காணிகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை தொடர்வதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இலுப்பைக் கடவை மற்றும் கள்ளியடி பகுதியில் சட்ட விரோதமாக பல ஏக்கர் காணிகள் பிடிக்கப்பட்டு, காடழிப்பு இடம்பெறுவதாகவும் தெரியவருகிறது.
காணி தொடர்பான பிரச்சினைகளை உரிய அதிகாரிகள் தலையிட்டு, தீர்த்து தருமாறு பறங்கிக்கமம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாம் காணிகளை வழங்கவோ, காடழிப்புக்கோ அனுமதி வழங்கவில்லை என்றும் காடுகள் அழிக்கப்படும் விடயம் தொடர்பாக வனவள திணைக்களமே கவனம் செலுத்த வேண்டும் என்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ். கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.