
181 கிலோ 100 கிராம் கஞ்சா போதைப் பொருளுடன் ஒருவர் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய வாகனம் மற்றும் இயந்திரத்துடனான வள்ளமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொண்ட சோதனை நடவடிக்கைக்கு அமைய இவ்வாறு கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நல்லூர் பகுதியில் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது கப் ரக வாகனத்தில் ஏற்றி செல்ல முற்பட்ட குறித்த வாகனம் சோதனையிடப்பட்டது.
இதன்போது குறித்த வாகனத்தில் 182 கிலோ 100 கிராம் எடை கொண்ட கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சியை சேர்ந்த வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, பொதியை ஏற்றிய வாகனமும், கடத்தலிற்கு பயன்படுத்தப்பட்ட வள்ளம் மற்றும் அதன் இயந்திரமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.