January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீன இராணுவ சீருடை சர்ச்சை ஏற்பட்ட திஸ்ஸ குளத்தின் தூர்வாரும் திட்டம் இடைநிறுத்தம்

இலங்கையின் ஹம்பாந்தோட்டை பகுதியில் உள்ள திஸ்ஸ குளத்தை தூர்வாரும் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுர மனதுங்க தெரிவித்துள்ளார்.

சீன இராணுவ சீருடையை ஒத்த உடை அணிந்து குளத்தை தூர்வாரும் திட்டத்தில் ஈடுபட்ட சீன பிரஜைகளால் திஸ்ஸ குளம் தொடர்பான சர்ச்சை மேலெழுந்தது.

திஸ்ஸ குளத்தின் அபிவிருத்தித் திட்டத்தில் சீன இராணுவ உடையை ஒத்த உடை அணிந்தவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில், தம்மிடம் முறையான அனுமதிகள் எதுவும் இன்றி குளத்தை தூர்வாரும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள தொல்பொருள் திணைக்களம், திட்டத்தை இடைநிறுத்த பணிப்புரை விடுத்துள்ளது.

குளத்தை தூர்வாருவதற்கு முறையான அனுமதி பெறப்பட்ட பின்னர் திட்டத்தை மீண்டும் தொடர முடியும் என்று தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டத்தில் சீன இராணுவத்தினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக வெளியான செய்தியை ஆளும் கட்சியும் சீன தூதரகமும் மறுத்துள்ளன.

குளத்தை தூர்வாரும் திட்டம் சீனாவின் லியோனிங் ஹாங்க்செங் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.