July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனாவுக்கு மத்தியில் அரசாங்கத்தினால் மக்களுக்கு கிடைத்த பயன்கள் பற்றி எவரும் பேசவில்லை’; ஜனாதிபதி!

இலங்கையில் கொரோனா பிரச்சினைகளுக்கு மத்தியில் அரசாங்கம் முன்னெடுத்த அபிவிருத்தி திட்டங்களால், நாட்டுக்கும் மக்களுக்கும் கிடைத்த பயன்கள் பற்றி எவரும் பேசவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் முன்னெடுக்கின்றன அபிவிருத்தி பணிகள்  உரிய முறையில் மக்களிடம் சென்றடையவில்லை என்பது எமது அரசாங்கத்தின் குறைபாடாக இருந்து வருகிறது.

இதன் விளைவு, ஊடகங்களின் வாயிலாக வெளிப்படுத்தப்படும் பிரச்சினைகளை மாத்திரமே மக்கள் பார்த்தனர்.
சமூக ஊடகங்களின் வாயிலாக பேசப்படுகின்ற சில பிரச்சினைக்குரிய விடயங்களை மட்டுமே தெரிந்து கொண்டார்கள்.

நாட்டின் மொத்த சனத் தொகையில் சுமார் 3 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. ஜூலை மாதத்தில் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளும் 2.5 இலட்சம் சினோவெக் தடுப்பூசிகளும் கிடைக்கவுள்ளன.

அதேபோன்று, இரண்டு மில்லியன் ஸ்பூட்னிக் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, ஓகஸ்ட் மாதமளவில் 5 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளும் 2.5 மில்லியன் சினோவெக் தடுப்பூசிகளும், 2 மில்லியன் ஸ்பூட்னிக் தடுப்பூசிகளும் கிடைக்கவுள்ளன.

இறுதியாக, செப்டம்பர் மாதத்தில் 3 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. இவ்வருடம் செப்டம்பர் மாதமளவில், 13 இலட்சம் மக்களுக்கான தடுப்பூசிகளை வழங்க கூடியதாக இருக்கும். அதன்படி, 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இக்காலப் பகுதியில் தடுப்பூசிகளை வழங்க கூடியதாக இருக்கும்.

அனைத்து இனத்தவர்களும் அனைத்து மதத்தவர்களும், தமது தனித்துவங்களை பாதுகாத்து, அடுத்தவருக்கு  பாதிப்பின்றி, சுயமரியாதையுடன் வாழ்வதற்கான அமைதியான சூழலை இந்தக் குறுகிய காலத்தில் நாம் கட்டியெழுப்பியுள்ளோம்.

தற்போது, பல வைரஸ் திரிபுகள் நாட்டுக்குள் உருவாகி இருப்பதுடன், வேகமாகவும் அந்த வைரஸ்கள் பரவி வருவதால், முன்னைய நிலைமைகளை பார்க்கிலும் பாரதூரமான சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று நிலைமைகள் காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும், நாளாந்த வருமானத்தை இழந்து அனாதரவான நிலைக்கு ஆளான மக்களுக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்க  ஒவ்வொரு முறையும் நாம் சுமார் 30 பில்லியன் ரூபாயை செலவிட்டிருக்கிறோம்.

கொரோனா பிரச்சினை உருவான காலம் முதல் இதுவரையில், 260 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை, மக்கள் நிவாரணங்களுக்காக அரசாங்கம் செலவிட்டுள்ளது.

திட்டமிடப்பட்டிருந்த நிவாரணங்களுடன் கொரோனா செலவுகளும் சேர்ந்து கொள்கின்ற போது, அது கடந்த வருடம் நாட்டின் மொத்த அரச வருமானமான 1,380 பில்லியன் ரூபாயின் அரைவாசியாக காணப்படுகிறது.

நாட்டில் இரசாயன உர இறக்குமதியை முற்றாகத் தடை செய்வது குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம் ஒரு முக்கிய தீர்மானமாகும்.

இரசாயன உரப் பயன்பாட்டிலிருந்து நீங்கி, நாட்டை சேதனப் பசளை  பயன்பாட்டுக்கு மாற்ற நாம் வழங்கிய உறுதிமொழியை, இந்த நாட்டின் 69 இலட்சம் மக்கள் அங்கீகரித்தனர்.

தற்போது, 1 1/2 மில்லியன் ஹெக்டயர் நிலத்துக்கு தேவையான மூன்று இலட்சம் மெட்ரிக் தொன் உரம் வழங்கப்பட்டுள்ளது. அதனுடன், 8,000 மெட்ரிக் தொன் சேதன பசளையும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரக்கூடிய பெரும் போகத்தில், விவசாயத்துக்கு தேவையான சேதன பசளையை வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது.

நாம் தற்போது முறையாக சேதன பசளை பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். ஒரு தேசம் என்ற வகையில் ஒன்றுபட்டு, இதற்காக அனைவரும் கைகோர்க்க வேண்டும்.

சேதன பசளை பயன்பாட்டின் மூலம், நீண்டகால நன்மைகளை நாடு என்ற வகையில் நாம் உறுதியாக எதிர்பார்க்க முடியும் என்று உள்நாட்டு, வெளிநாட்டு நிபுணர்கள் கூறுகின்றார்கள்.

இரசாயன உரம் இல்லாமல் விவசாயத்தை முன்னேற்ற முடியாது என்ற கருத்தை கொண்டிருக்கின்றவர்கள், இந்தத் தீர்மானம் காரணமாக கிடைக்கும் நீண்டகால பொருளாதார நன்மைகளை எதிர்காலத்தில் தெளிவாக விளங்கிக் கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இன்று இரசாயன உரத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உற்பத்திகளுக்கு, உலகெங்கிலும் பாரிய கேள்வி உள்ளது. இலங்கையானது, இரசாயன உரத்தை பயன்படுத்தாத ஒரு நாடாக சர்வதேச ரீதியில் அறிமுகப்படுத்தப்படும் போது, எமக்கு பாரிய சந்தை வாய்ப்பு கிடைக்கும்.

இந்த நாட்டைச் சேர்ந்த சுமார் 6 மில்லியன் குடும்பங்கள் உள்ள பிரஜைகளில் பலருக்கு, தமது வாழ்க்கை மட்டத்துக்கு ஏற்ற ஒரு வீடு இல்லை.

இந்த நிலைமையை மாற்றி, ‘மகிழ்ச்சியாக வாழும் குடும்பம்’ என்ற எண்ணக்கருவின் கீழ் இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து  குடும்பங்களுக்கும், வாழ்வதற்குப் பொருத்தமான வீட்டைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய சூழலை நாம் ஏற்படுத்துவோம்.

பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் விவசாயத் துறையுடன் சம்பந்தப்பட்டு தாபிக்கப்பட்டுள்ள அனைத்து ஆராய்ச்சி நிறுவனங்களையும் ஒன்றிணைத்து, பெருந்தோட்ட, விவசாயம் தொடர்பான தேசிய பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்காக, அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக, உயர்கல்வி நிறுவனங்கள் இல்லாத 10 மாவட்டங்களை தெரிவு செய்து, அவற்றின் நகரப் பிரதேசங்களில், நகரப் பல்கலைக்கழகங்களை (CITY UNIVERSITIES) கட்டியெழுப்புவதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.

அன்று போலவே இன்றும் உங்களுக்குத் தலைமைத்துவத்தை வழங்க நான் தயாராக இருக்கிறேன். நான் எனது பொறுப்புகளை தட்டிக்கழிக்காது நிறைவேற்றுவேன். நாட்டை நேசிக்கின்ற, எதிர்கால தலைமுறைக்காக பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளத் தயாரான அறிவார்ந்த மக்கள், எனக்கும் எனது அரசாங்கத்துக்கும், எமது நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக தொடர்ந்தும் ஒத்துழைப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்.