November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் சீன இராணுவ சீருடையை ஒத்த உடையில் காணப்பட்ட நபர்களால் சர்ச்சை!

இலங்கை அம்பாந்தோட்டை, திஸ்ஸமஹராம குளத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் திட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களில் சிலர் சீன இராணுவத்தின் சீருடைக்கு ஒத்த உடையை அணிந்திருப்பதாக சர்ச்சை  எழுந்துள்ளது.

இது தொடர்பில் எதிர்க்கட்சி எம்பியான  மனுஷ நாணயக்காரவினால் பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ராலிடம்  கேள்வி எழுப்பப்பட்டடிருந்தது.

இது பொருத்தமற்ற விடயம் என தெரிவித்து அதற்கு பதில் வழங்குவதற்கு இராஜாங்க அமைச்சர் மறுத்திருந்தார்.

இந்நிலையில் குறித்தப் பகுதியில் பணியாற்றுபவர்கள் அவர்களின் நிறுவனத்தின் ஆடையை அணிந்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது சீன இராணுவ உடை அல்ல என கூறியுள்ள அவர், இதனை சீன இராணுவத்தின் உடையென கூறுவது கேலிக்கையான விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

திஸ்ஸமஹராம குளத்தில் தூர்வாரும்  திட்டம் சீனாவின் லியோனிங் ஹாங்க்செங் சாலை மற்றும் பாலம் கட்டுமான நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது, இந்த திட்டம் சமீபத்தில் அமைச்சர் சமல் ராஜபக்‌ஷவினால் திறந்துவைக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் பணியாற்றுபவர்கள் சீன இராணுவத்தின் சீருடையை ஒத்த உடையை அணிந்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து அதனை மறுத்து சீன தூதரகம் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

 

இதுபோன்ற உடைகள் இணையத்தில் கொள்வனவு செய்ய முடியும் எனவும் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, திஸ்ஸமஹராம பகுதியில் பணியாற்றும் சீனர்கள் அணிந்துள்ள உடையில் மெல்லிழை வளையத்திலான சீனாவின் இராணுவ இலச்சினை பொருத்தப்பட்டிருந்ததாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், ஊடகங்களில் வெளியான செய்திகளை தொடர்ந்து, தற்போது குறித்தப் பகுதியில் இந்த உடைகள் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கி.மு. 3ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் திஸ்ஸமஹராம வாவியை தூர்வாருவதற்கு  எவ்வித அனுமதியும் கோரப்படவில்லை என தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.