November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கான தனது உரையில் உள்ளடக்க வேண்டிய 6 அம்ச விடயங்களை எதிர்க்கட்சி வெளியிட்டது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, இன்று இரவு நாட்டு மக்களுக்காக விசேட உரையாற்றவுள்ள நிலையில், அதன்போது அவர் வெளியிட வேண்டிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி ஆறு அம்சக் கோரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

எரிபொருள் விலையேற்றத்தைக் குறைத்தல், விவசாயிகளுக்கு உரங்களை விநியோகித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வெளியிட்டுள்ள அந்த கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே சஜித் பிரேமதாஸ ஆறு அம்சக் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார்.

இதன்படி ஏற்கனவே இருந்த விலைக்கு எரிபொருள் விலையை குறைத்தல், உரங்களின் பயன்பாட்டை மாற்றுவதற்கான முறையான திட்டத்தை வகுத்தலும், வரவிருக்கும் நெல் பருவங்களுக்கு விவசாயிகளுக்கு இலவசமாக உரங்களை வழங்குதல், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தால் மீன்பிடிச் சமூகத்திற்கு ஏற்பட்ட சேதங்களுக்கு ஒரு நிலையான நிவாரண திட்டம் ஒன்றை வகுத்தலும், எக்ஸ்பிரஸ் போர்ல் தீவிபத்தால் ஏற்பட்ட சூழல் கட்டமைப்பை மீளப் பாதுகாத்தல் ஆகியன அந்த ஆறு அம்சக் கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இணையவழி கல்விக்கான வசதிகள் இல்லாததால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குதல், கொரோனா தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்தல் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப மக்களுக்கு நிதி ரீதியாக நிவாரணம் வழங்குவதில் கவனம் செலுத்தல் போன்ற விடயங்களையும் அவற்றில் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது மேற்கூறிய மக்கள் பிரச்சிணைகளுக்கு தீர்வு வழங்குவார் என அவர் எதிர்பார்ப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.