February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். நல்லூர் கோயில் வீதியில் விடுதியொன்று முற்றுகை: இரு பெண்கள் உட்பட 6 பேர் கைது

யாழ்ப்பாணம், நல்லூர் கோயில் வீதியில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றதாகக் கூறும் விடுதி ஒன்று யாழ். குற்றத்தடுப்பு பிரிவினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

அதன்போது, குறித்த விடுதியில் இருந்து இரண்டு பெண்கள், 3 இளைஞர்கள் மற்றும் விடுதி உரிமையாளர் ஆகியோரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நல்லூர் கோயில் வீதியில் உள்ள விடுதியொன்றில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய, அந்த விடுதியைச் சோதனையிடுவதற்கான அனுமதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பெறப்பட்டது.

இதனையடுத்து யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் பிரிவினர் அந்த விடுதியை சுற்றிவளைத்து அங்கிருந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட 6 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் குருநகர், மானிப்பாய் மற்றும் உரும்பிராயைச் சேர்ந்தவர் கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இவர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.