
தமிழ் அரசியல் கைதிகள் 16 பேரின் விடுதலையை நல்லதொரு ஆரம்பமாக கருதுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இப்போதும் பலரது வழக்குகள் நிலுவையில் உள்ளன. இன்னும் பலர் வழக்குகள் தொடரப்படாது தடுப்புக்காவலில் உள்ளனர். பத்து வருடங்களுக்கும் மேலான காலம் இவ்வாறு தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ள சுமந்திரன் அவர்கள் அனைவரையும் விரைவில் விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்காள்வதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை மிகக்கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும் என்று ஜனாதிபதியை வலியுறுத்துவதாகவும், இந்தச் சட்டத்தால் நாட்டில் நடந்த நல்ல விடயங்கள் எதுவும் இல்லை எனவும், இதனை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து ஜனாதிபதி தனது நல்ல பக்கத்தை வெளிப்படுத்தியுள்ள போதிலும், தனது அரசியல் சகாவான மரண தண்டனை கைதி துமிந்த சில்வாவை விடுதலை செய்துள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
கொலை குற்றச்சாட்டில் குற்றம் நிருபிக்கப்பட்டு உயர் நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகளால் தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு குற்றவாளியை பொது மன்னிப்பில் விடுவித்தமை மிக மோசமான செயற்பாடாகும் எனவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.