
அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியுள்ள முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, விரைவில் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளதாக அரசியல் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எப்போது அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பது என்பது குறித்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் தற்போது கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
ஜுலை 6 ஆம் திகதி அவர் பதவியேற்பது பொருத்தமானதாக இருக்கும் என்று கட்சிக்குள் ஒரு தரப்பினர் கூறியுள்ளதாகவும், ஆனால் அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பின்னர் பதவியேற்பதே பொருத்தமானது என்று மற்றுமொரு தரப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பஸில் ராஜபக்ஷ தேசியப் பட்டியல் ஊடாகவே பாராளுமன்ற உறுப்பினராகவுள்ளார். இதற்காக ஜயந்த கெட்டகொட அல்லது பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோரில் ஒருவர் பதவி விலகி பஸிலுக்கு இடம் வழங்கவுள்ளதாக பொதுஜன பெரமுன தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஸில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினரானதும் பொருளாதார விடயங்கள் தொடர்பான அமைச்சராக பதவியேற்கலாம் என்று கூறப்படுகின்றது.