டெல்டா வைரஸ் நாட்டில் வேகமாக பரவக்கூடிய நிலையொன்று காணப்படுவதாகவும், இந்தியாவின் திரிபுபட்ட (டெல்டா பிளஸ் எ.வை. 1) என்ற வைரஸாக இது மாற்றமடைய வாய்ப்புகள் இருப்பதாகவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வு மையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்தார்.
இந்தியாவில் தற்போது பரவிக்கொண்டுள்ள திரிபுபட்ட (டெல்டா பிளஸ் எ.வை. 1) கொவிட் வைரஸ் உலகில் ஒன்பது நாடுகளில் பரவிக்கொண்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மக்கள் அனாவசியமான கூட்டங் கூடுதல் மற்றும் ஏனைய செயற்பாடுகள் காரணமாகவே வைரஸ் தொற்று வேகமாக பரவும். பயணத் தடை பிறப்பிக்கப்பட்டதன் மூலமாக பலன் கிடைக்கவில்லை என கூறிவிட முடியாது.ஓரளவு சாதகமான பெறுபேறுகளை பெற்றுக்கொண்டுள்ளோம். ஆனால் முழுமையாக வெற்றி கிடைக்கவில்லை.பயணக் கட்டுப்பாட்டை மேலும் கடுமையாக்கி நிலைமைகளை கையாண்டிருக்க முடியும்.எப்படியும் நான்கு வாரங்கள் பயணத்தடையை பிறப்பிக்க தீர்மானித்தவர்கள் அதனை கடுமையாக்கியிருக்க முடியும்.
எனினும் நாம் சுகாதார தரப்பாக மாத்திரம் சிந்திக்கின்றோம்.நாட்டின் பொருளாதாரத்தையும் சித்திக்க வேண்டும்.அதனை நாம் மறுக்கவில்லை.எவ்வாறு இருப்பினும் டெல்டா வைரஸ் போன்ற மோசமான வைரஸ் ஒன்று பரவுகின்றது என்றால் ஏனைய காரணிகளை விடவும் மக்களின் உயிரை பாதுகாப்பதே பிரதானமானதாகும்.
நாடு திறக்கப்பட்டவுடன் மக்கள் பொறுப்பற்று செயற்படுவதை தவிர்த்துக்கொள்ள முடியும் என்றால் எந்த பிரச்சினையும் ஏற்படப்போவது இல்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.