July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்தால் பயண கட்டுப்பாடு மீண்டும் அமுல்படுத்தப்படும்; சுகாதாரப் பணிப்பாளர்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டால் எதிர்காலத்தில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளுக்கு செல்ல வேண்டி ஏற்படும் என சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நாளை (25) இரவு முதல் ஜூலை 5 ஆம் திகதி மீண்டும் நாடளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தற்போதைய கொரோனா நிலைவரம் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

தற்போது, தினமும் சுமார் 2,000 முதல் 2,200 நோயாளிகள் பதிவாகின்றனர். எனவே, பயணக் கட்டுப்பாடுகள் நிச்சயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் மக்கள் இந்த சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என்பதை நாங்கள் பார்த்தோம். அது மீண்டும் நடைபெற்றால், கடுமையான பயண கட்டுப்பாடுகளை அமுல்படுத்த வேண்டி ஏற்படும் என அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், எதிர்காலத்தில் பயண கட்டுப்பாடுகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது தொடர்பிலும், பயணக் கட்டுப்பாடுகளின் முடிவுகள் தற்போது பகுப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று (23) இரவு 10 மணிக்கு விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடு நாளை (24) அதிகாலை 4 மணிக்குள் நீக்கப்படும். அதன்பிறகு, மேல் மாகாணத்திலும், பிற மாகாணங்களிற்கும் ஜூலை 05 ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் அமுல்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.

இதனிடையே, சுகாதார விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதற்கும், கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, டெல்டா வைரஸ் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

டெல்டா வகை வைரஸினால் பாதிக்கப்பட்ட தெமடகொட – அராமய பகுதியில் ஐந்து தொற்றாளர்கள் மாத்திரமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனவே, நாட்டின் வேறெந்த பகுதியிலும் இதுவரை டெஸ்டா வைரஸினால் பாதிக்கப்பட்ட வேறு எவரையும் நாங்கள் கண்டுபிடிக்கவில்லை.

இதில் குறித்த பகுதியில் உள்ள அனைவருக்கும் எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டுள்ளோம். மாதிவெல பகுதியில் ஒரு வீட்டில் மாத்திரம் டெல்டா வைரஸினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அதுவும் சந்தேகத்துக்குட்பட்டதாக உள்ளது என அவர் தெரிவித்தார்.

இதனிடையே, அஸ்ட்ரா செனிகா முதல் டோஸ் எடுத்தவர்களுக்கு பைசர் தடுப்பூசியை இரண்டாவது டோஸாக கொடுக்க முடியுமா என்று விவாதிக்கப்பட்டது. தடுப்பூசிகள் குறித்த நிபுணர் குழு எதிர்காலத்தில் கூடி அவர்களின் பரிந்துரைகளை  செய்யும். பின்னர் எங்களால் ஒரு முடிவை எடுக்க முடியும்.

அதேபோல், எதிர்காலத்தில் முதலீட்டு ஊக்குவிப்பு வலையங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போது, தினமும் 18,000 முதல் 20,000 பி.சி.ஆர் வரை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றும் அன்டிஜன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.