July 13, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘துமிந்த சில்வாவின் விடுதலையை இரத்துச் செய்ய வேண்டும்’: எதிர்க்கட்சி

ஜனாதிபதியின் தவறான முன்மாதிரி மூலம் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும், துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட விடுதலை மீளப் பெறப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பின் மூலம் சட்டத்தின் ஆட்சியும் சுதந்திரமும் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

சர்வதேச அமைப்புகள் இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் நிலையில் ஜனாதிபதியின் இந்த செயற்பாடு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சியின் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் பழிவாங்கல் தொடர்பான அவதூறுமிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவின் சிபாரிசுகளைப் பெற்றுக்கொண்டு, நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை மாற்றியமைப்பதற்கு சட்டமா அதிபருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூலம் வழங்கப்பட்ட தீர்ப்பை உயர் நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் உட்பட ஐவர் அடங்கிய நீதயரசர்கள் குழுவினால் உறுதிப்படுத்திய பின்னர் ஜனாதிபதி அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

சர்வதேசத்தில் நாட்டின் நற்பெயர் நாளுக்கு நாள் குறைந்து செல்லும் இவ்வேளையில் அரசாங்கத்தின் துமிந்த சில்வாவுக்கு விடுதலை வழங்கியதானது, உலகில் இலங்கையை தனிமைப்படுத்தும் செயற்பாடாகும் என்று மத்தும பண்டார கவலை தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தனது அரசியல் நண்பனுக்கு மன்னிப்பை வழங்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டத்தினால் வழங்கப்பட்ட நீதியை இல்லாமல் ஆக்கியுள்ளதாக ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.