தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் மற்றுமொரு சிங்கத்துக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஷீனா என்ற 12 வயது சிங்கம் ஒன்றே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரச கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் செயலாளர் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் நுவன் ஹேவாகமகே தெரிவித்தார்.
இந்நிலையில் தொற்றுக்குள்ளான சிங்கம் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தோர் என்ற சிங்கத்துக்கு கொவிட் -19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையால் அங்குள்ள ஏனைய விலங்குகளுக்கும் பி.சி.ஆர் பரிசோதனையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே தற்போது மற்றொரு சிங்கத்துக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
விலங்குகளை இவ்வாறான தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கும் பொறுப்பு வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணப்படுகிறது. அவ்வாறிருந்தும் இவ்வாறு விலங்குகள் தொற்றுக்கு உள்ளாவது கவலைக்குரியதாகும் என்று அரச கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் செயலாளர் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் நுவன் ஹேவாகமகே தெரிவித்தார்.
இதனிடையே, தொற்றுக்குள்ளான சிங்கத்தின் உடல்நிலை மோசமான நிலையில் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் தொற்றுக்குள்ளான தோர் என்ற சிங்கம் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.