பயணக் கட்டுப்பாட்டின் போது சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு கைது செய்யப்படுபவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு 10 மணிக்கு அமுலான இந்த நடமாட்ட கட்டுப்பாடு நாளை அதிகாலை 4 மணி வரையில் தொடரவுள்ளது.
இந்த நிலையில், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு கைது செய்யப்படுபவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட மாட்டாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அத்துடன், கைது செய்யப்படுபவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் அசையும், அசையா சொத்துகள் பறிமுதல் மற்றும் சீல் வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொசன் பௌர்ணமி தினமான இன்று (24) மக்கள் வீடுகளிலேயே இருந்து தனிமைப்படுத்தல் விதிகளுக்கு மதிப்பளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
அத்தியாவசிய சேவையில் ஈடுபடுகின்றவர்கள் மாத்திரம் வீடுகளில் இருந்து வெளியே செல்ல முடியும். எவரேனும் ஒருவருக்கு திடீர் சுகயீனம் ஏற்றபட்டால், அருகிலுள்ள வைத்தியசாலைக்கு செல்ல அனுமதி உண்டு.
அத்துடன், மனிதாபிமான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காகவும் வெளியே செல்ல முடியும் என அவர் கூறினார்.
இது இவ்வாறிருக்க, நாட்டில் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சுமார் ஆயிரத்து 200 வீதித் தடைகள் ஊடாக கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.