July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மக்கள் மைய பொருளாதாரம் இயற்கையை நேசிக்கும் பிரஜைகளினாலேயே சாத்தியம்’: ஜனாதிபதி

மக்களை மையமாகக் கொண்ட பொருளாதார இலக்குகளை அடைந்து கொள்வதற்கும் சுபீட்சமானதொரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கும், நாம் வாழும் பூமி, உயிரினங்கள் மற்றும் மரம் செடிகொடிகளை நேசிக்கும் பிரஜைகளினாலேயே சாத்தியம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வெளியிட்டுள்ள பொசன் தின வாழ்த்துச் செய்தியிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை ஒரு சுபீட்சமான தேசமாகக் கட்டியெழுப்புவதற்கு தான் முழு அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சிறந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஏதுவாக அமைந்த பௌத்த போதனைகளையும் தசராஜ தர்மத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஆட்சி எண்ணக்கருவை தமது ஆட்சி நிர்வாகத்திலும் ஒரு முன்னுதாரணமாகக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பண்டைய பாரம்பரியங்களுக்கு ஏற்ப, பொசன் நிகழ்வுகளை நடத்த நாட்டின் தற்போதைய சூழல் இடம் தராததையிட்டு ஜனாதிபதி கோட்டாபய கவலை தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றுப் பரவல் நிலைமைகளில் இருந்து பாதுகாப்பாக சமய நெறிமுறைகளைப் பின்பற்றி, மகிந்த தேரரை நினைவுகூர்வதற்கு முயற்சிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.