அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தொடர்ச்சியாக நாம் குரல் எழுப்பி வருகின்றோம். நாளை (24)பொசன் போயா முடிந்தால் நாளை அவர்களை விடுவித்துக்காட்டுங்கள் என எம்.ஏ .சுமந்திரன் எம்.பி அரசாங்கத்திடம் சவால் விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ .சுமந்திரன் அரசாங்கம் இன்றும் அரசியல் கைதிகளை வைத்துக் கொண்டு பிரசாரம் செய்கின்றது என தெரிவித்தார்.
பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவது குறித்தும், அரசியல் கைதிகளை விடுவிப்பது குறித்தும் அரசாங்கம் பேசிக்கொண்டு இருக்காது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் கூறினார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அரசாங்கம் இப்போது பேசி வருகின்றது.எனக்கு தெரிந்த வரையில் 2010 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து போராடி வருகின்றோம்.
எந்தவொரு பாராளுமன்ற கூட்டத் தொடரிலும் இந்த விடயத்தை பேசாது போனதில்லை. ஆகவே தசாப்த காலமாக இந்த விடயங்களை நாம் பேசிக் கொண்டே உள்ளோம்.
2011 ஆம் ஆண்டில் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் தமிழ் அரசியல் கைதிகள் குறித்த தகவல்களை பெற்றுக் கொடுக்க அவர் எனக்கு அனுமதி வழங்கினார்.
நானும் அதனை செய்தேன்.தமிழ் அரசியல் கைதிகளின் பட்டியலை அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைத்தேன் என்றார்.
அரசியல் கைதிகளின் விடுதலையை வைத்துக் கொண்டு அரசாங்கம் பிரசாரம் செய்து கொண்டுள்ளது. சுரேன் ராஹவனுக்கும் அந்த தேவை உள்ளது. உங்களால் எத்தனை அரசியல் கைதிகளை விடுவிக்க முடியும் என நாமும் பார்க்கின்றோம்.
அரசாங்கத்தில் ஒருவர் இது குறித்து பேசியதை வரவேற்பதாக தயாசிறி போன்றவர்கள் கூறுகின்றனர். வரவேற்க தேவையில்லை, வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்.
நாம் இந்த விடயங்களை வைத்துக் கொண்டு அரசியல் செய்கின்றோம் என்ற தவறான கருத்துக்களை சிலர் கூறி வருகின்றனர். ஆனால் உண்மை என்னவென்பது சகலருக்கும் தெரியும்.
சுரேன் ராஹவன் என்ன செய்கின்றார், அரசாங்கத்தின் சலுகைகளுக்காக அவர் அரசியல் கைதிகளை வைத்து செய்த அரசியல் என்னவென எனக்கு நன்றாக தெரியும் எனவும் சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.