July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் பி.சி.ஆர் சோதனைகளுக்கு நாள் ஒன்றுக்கு 72 மில்லியன் செலவிடப்படுவதாக அரசாங்கம் தெரிவிப்பு!

நாட்டில் டெல்டா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தால் பாரியளவில் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என தொற்று நோய்கள் மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே சபையில் தெரிவித்தார்.

நாடாக இன்று மூன்றாவது கொவிட் அலைக்கு முகங்கொடுத்து வருகின்றோம். முதலாம் அலையில் எமக்கு பெரிய தாக்கம் ஏற்படவில்லை.

ஆனால் வைரஸ் தன்மை மாற்றுபட்டு அல்பா என்ற வைரஸ் தொற்றுக்கு முகங்கொடுத்து வருகின்றோம்.

மரணங்களும், தொற்றாளர் எண்ணிக்கையும் 50 வீதத்தால் அதிகரித்துள்ளது.

சுகாதார துறையும் நெருக்கடியை சந்தித்துள்ளது. எனினும் அரசாங்கமாக நாம் நெருக்கடிகளை சமாளிக்க சுகாதார துறையை விரிபுபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

பி.சி.ஆர் செய்வதற்காக ஒரு நாளைக்கு 72 மில்லியன் செலவாகின்றது. இதுவரை 15 பில்லியன் ரூபா செலவாகியுள்ளது.

வைரஸ் பரவல் மாறிக்கொண்டுள்ளது.ஆகவே இன்று நாளை முடிவுக்கு வந்துவிடும் என கூற முடியாது.

இப்போதுள்ள உலகளவில் பரவிக் கொண்டுள்ள வைரஸ்கள்  இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள டெல்டா வைரஸுக்கு  மாற்றமடைகின்றது என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுக்கின்றது.

எனவே இதன் தாக்கம் அதிகமாகும். தொடர்ச்சியாக நாம் சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல வேண்டியுள்ளது என்றார்.

நாட்டிற்கு இப்போது அதிகளவிலான ஒக்சிஜன் தேவைப்படுகின்றது.எனவே மேலதிகமாக ஒக்சிஜன் தேவைகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

அதேபோல் அவசியமான மருந்துகளை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். தடுப்பூசிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம். நாட்டில் 70 வீதமான மக்களுக்கு தடுப்பூசி ஏற்ற வேண்டும் என்றார்.