October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை கடற்பரப்பில் இதுவரை 150 க்கும் அதிகமான கடல் உயிரினங்களின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன!

இலங்கை, கடற்பரப்பில் எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து காரணமாக ஏற்பட்டுள்ள கடல் மாசு காரணமாக 150 க்கும் மேற்பட்ட கடல் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன.

நேற்றைய தினம் (22) வரை 100 ஆமைகள், 15 டொல்பின்கள், 3 திமிங்கலங்கள் மற்றும் ஏராளமான கடல் பறவைகள் மற்றும் மீன் இனங்களின் உடல்கள் இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளன.

இறந்த கடல் விலங்குகள் குறிப்பாக மேற்கு கடற்கரை பகுதிகளில் அதிகமாக கரை ஒதுங்குகின்றன.

சனிக்கிழமையன்று, மன்னார் முசலி கரடிக்குளி கடற்கரையில் தீக்காயங்களுடன் இறந்த திமிங்கலம் கரைக்கு வந்தது. இது சுமார் 12 அடி நீளம் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, வனவிலங்கு பாதுகாப்பு துறை உயிரினங்களின் இறப்புகளின் எண்ணிக்கையை குறைக்க முயற்சித்து வருவதாக சுற்றுச் சூழல் ஆர்வலர் ஹேமந்த விதானகே தெரிவித்துள்ளார்.

இலங்கை பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி வட்டம், சுப்புன் லஹிரு பிரகாஷ், கடல் வாழ் உயிரினங்களின் இறப்பு குறித்த வனவிலங்குகள் அதிகார சபையின் விசாரணைகள் தொடர்பில் கவனம் செலுத்தும்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.