இலங்கை மீது ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செயற்படுத்துவதில் முன்னேற்றங்கள் இல்லை என்று தீர்மானத்தைக் கொண்டுவந்த நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன.
கனடா, ஜெர்மனி, வட மெசிடோனியா, மலாவி, மொன்டினீக்ரோ மற்றும் பிரிட்டன் ஆகியன இலங்கையின் முன்னேற்றங்கள் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
தீங்கு விளைவிக்கும் சட்டங்களை நீக்கி, மனித உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தும் ஐநா 46/1 தீர்மானத்தை அமுல்படுத்துவதில் இலங்கை முன்னேற்றம் காணவில்லை என்று குறித்த நாடுகள் தெரிவித்துள்ளன.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரிட்டன் தலைமையிலான நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன.
அண்மைக் காலமாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் பயன்பாடு மற்றும் நீதி மேற்பார்வை இன்றிய மீள்குடியேற்ற செயற்பாடுகள் கவலை தருவதாகவும் குறிப்பிட்டுள்ளன.
சட்டத்தரணி ஹிஜராஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் கவிஞர் அஹ்னாப் ஜெஸீம் ஆகியோர் சாட்சியங்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்துள்ளதோடு, பக்கச்சார்பற்ற விசாரணைகளையும் கோரியுள்ளன.
சிறுபான்மை சமூகங்கள் மற்றும் அரசியல் ரீதியான எதிர்த் தரப்பினர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதற்கும் பிரிட்டன் தலைமையிலான நாடுகள் கவலை வெளியிட்டள்ளன.
பொலிஸ் தடுப்புக் காவலில் உயிரிழந்தவர்கள் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணைகளையும் குறித்த நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
ஐநா 46/1 தீர்மானத்தை அமுல்படுத்துவதில் இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரிட்டன் கேட்டுக்கொண்டுள்ளது.