November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவுக்கு கடத்தப்படவிருந்த பெருமளவான சங்குகள் புத்தளத்தில் மீட்பு!

சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு கடத்தப்படவிருந்த 33,680 சங்குகள் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி புத்தளம் பகுதியில் வைத்து ஒரு தனியார் நிறுவனத்தினால் சங்குகளின் பங்குகளை கொள்கலன்களில் அடைத்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப் போவதாக புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து இரண்டு தினங்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து ஏற்றுமதி செய்வதற்கு தடை செய்யப்பட்ட சங்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடற்றொழில் மற்றும் நீரியல் வழங்கல் திணைக்களத்தினால் ஏற்றுமதி உரிமத்தின் அதிகாரத்தின் கீழ் தவிர சங்கு ஓடுகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, 70 மில்லி மீற்றருக்கும் குறைவான விட்டம் கொண்ட சங்கு ஓடுகளை வைத்திருத்தல், வாங்குவது, காட்சிப்படுத்தல், விற்பனை செய்தல், போக்குவரத்து அல்லது ஏற்றுமதி செய்வது உள்ளிட்ட விடயங்கள் இந்த சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே, சுங்கப் பிரவினரால் பறிமுதல் செய்யப்பட்ட சங்குகளில் 21,480 பங்குகள் 70 மில்லி மீற்றருக்கும் குறைவான விட்டம் கொண்டவை என்று சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுங்க திணைக்களத்தின் பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.