அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் இராணுவத்தினரிடம் வழங்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர் மேற்கொண்ட உரையின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையின் அரசியலமைப்புக்கு அமைய நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பு அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்துக்கு உரியதாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அரசாங்கம் நாட்டில் பெரியவர்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கி, சிறியவர்களை பட்டினியில் போட்டுள்ளதை தான் அவதானிப்பதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டில் நாட்டில் வெளிநாட்டு நிதி கையிருப்பாக 700 கோடி டொலர்கள் இருந்ததாகவும், இப்போது 400 கோடி டொலர் வரையில் குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு கோடிக் கணக்கான வெளிநாட்டு கடன்கள் உள்ள நிலையில், கடன்களில் இருந்து விடுபடுவதற்கான திட்டங்கள் இருக்க வேண்டும் என்றும் ரணில் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நிதி வழிகளின் ஊடாக கொடுக்கல் வாங்கலை செய்வதே நாட்டை மீட்பதற்கான இருக்கும் ஒரே வழி என்றும் அது இல்லையென்றால் அரசாங்கம் கூறும் திட்டம் என்ன? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா தொடர்பான ஜனாதிபதி செயலணி முற்றாக தோல்வியடைந்துள்ளதாகவும், அதிகாரங்கள் அமைச்சரவைக்கும் பாராளுமன்றத்திற்குமே இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிதிச் சபையின் கலந்துரையாடலுக்கு நிதி அமைச்சரோ அல்லது நிதி இராஜாங்க அமைச்சரோ வருவதற்குப் பதிலாக இராணுவத் தளபதி வருவதாகவும் இதனை அனுமதிக்க முடியாது என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.