July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பல்பொருள் அங்காடிகள், பொதுப் போக்குவரத்தை கண்காணிக்க சிவில் உடையில் பொலிஸார்!

பொதுமக்கள் உரிய முறையில் சுகாதார பரிந்துரைகளை பின்பற்றுகின்றார்களா என்பதை கண்டறிய பல்பொருள் அங்காடிகள், சிறப்பு கடைத் தொகுதிகள் மற்றும் பொது போக்குவரத்து சேவைகளில் பொலிஸார் சிவில் உடையில் கடைமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி, முகக்கவசம் அணிதல், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறல் உள்ளிட்ட சுகாதார பரிந்துரைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முகக்கவசங்ளை அணிந்து கடைகளுக்குள் நுழையும் நபர்கள், சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிப்பது மற்றும் பொதுப் போக்குவரத்தில் சுகாதார விதிமுறைகளை மீறுவது போன்றவற்றை கண்காணிப்பதற்கு பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், திங்கட்கிழமை முதல் பயண கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர் பொது மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றத் தவறிவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன என்றும் அவர் கூறினார்.

எனவே, சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 433 பேர் நேற்று (22) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.