
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இன்று முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்றம் கூடியதை தொடர்ந்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்தார்.
அதன்பின்னர் அவர் தனக்கென எதிர்க்கட்சி பக்கத்தில் முன்வரிசையில் ஒதுக்கப்பட்டுள்ள 13 ஆவது ஆசனத்தில் அமர்ந்துகொண்டார்.
இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவின் ஆசனத்திற்கு அருகில் உள்ள 12 ஆவது ஆசனம் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கும் 14 ஆவது ஆசனம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
2020 ஆகஸ்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி எந்தவொரு மாவட்டத்திலும் ஆசனங்கள் எதனையும் பெற்றுக்கொள்ளாத போதும், நாடு முழுவதும் பெற்றுக்கொண்ட வாக்கு விகிதத்திற்கு அமைய தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்றை பெற்றுக்கொண்டது.
அந்த ஆசனத்திற்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க கட்சி தீர்மானித்ததை தொடர்ந்து, அது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு சில தினங்களுக்கு முன்னர் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தது. இதன்படி இன்று அவர் பாராளுமன்ற உறுப்பினரான சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.