November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயங்கரவாதிக்கு துணை போகிறார் ஹக்கீம்; அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றச்சாட்டு

ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை தண்டிக்க அரசாங்கம் பின்வாங்குவதாக ஒரு பக்கம் அரசாங்கத்தை குற்றம் கூறிக்கொண்டு பயங்கரவாதிகளை காப்பாற்றும் நடவடிக்கையை எதிர்க்கட்சி உறுப்பினர் ரவூப் ஹக்கீம் முன்னெடுத்து வருகின்றார். முற்று முழுதாக பயங்கரவாதிக்கு துணை போகும் போக்கில் ஹக்கீம் செயற்படுகின்றார் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சபையில் குற்றம் சுமத்தினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை, தமிழ் அரசியல் கைதிகள் விடயம் குறித்தும் பயங்கரவாத தடைச் சட்டம் குறித்தும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அமைச்சரவை அறிவிப்பொன்றை முன்வைத்திருந்த நிலையில், அதில் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் குறித்தும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது அவர் கூறுகையில்;

சிறைச்சாலைக்குள் இருக்கும் நபர்கள் குறித்து ஒரு பக்கம் பேசினாலும்,அதற்கு வெளியில் குற்றச்சாட்டில் சிலர் கைது செய்யப்படுகின்றனர்.அப்பாவிகள் சிலர் கைது செய்யப்படுகின்றனர்.உதாரணமாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் போன்றவர்களுக்கு நீண்ட காலமாக பிணை வழங்காது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடை சட்டத்தை தவறாக பயன்படுத்துகின்றமை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரும் பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதனால் எமக்கு ஜி.எஸ்.பி சலுகையும் இல்லாது போகும் நிலை உருவாகியுள்ளது. ஆகவே இது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படாத வழக்குகள் அரசியல் ரீதியில் பயங்கரவாத தடுப்பு பிரிவின் கீழும், குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கீழும் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்னர். ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஷானி அபேசேகரவின் வழக்கில் பிணைக்கான தீர்ப்பை பார்த்தால் அரசாங்கத்திற்கு கன்னத்தில் அறைந்ததைப் போல் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அரசாங்கம் இதனை திருத்திக்கொண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான தவறுகளை நிறுத்த வேண்டும் என்றார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறுகையில்;

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட குற்றவாளிகளை தண்டிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றது என்பதையே எதிர்க்கட்சி உறுப்பினர் ஹக்கீம் எப்போதும் கூறுவார். ஆனால் நாம் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்விற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளோம். தவறு செய்தவர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்தவுடன் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி தண்டிக்கிறோம் என குற்றம் சுமத்துகின்றீர்கள். கர்தினாலிடம் சென்று வேறு ஒன்றை கூறுகின்றீர்கள். குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு தொடுத்தவுடன் பயங்கரவாதிகளுக்காக நியாயம் பேசுகின்றீர்கள்.எதிர்கட்சியும், ஹக்கீமும் பயங்கரவாதிகளுக்கு துணை நிற்கின்றனர்.ரவூப் ஹக்கீம் மூலமாக அது தெளிவாக வெளிப்பட்டுவிட்டது.எதிர்க்கட்சி தலைவர் இதனை ஏற்றுக் கொள்கின்றாரா?.பயங்கரவாதிகளுக்கு ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கற்பித்துள்ளார். அவருக்காக நீங்கள் துணை நிற்பது நியாயமா? என்றார்.