தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும், நீதி அமைச்சரும் கூறிய கருத்துக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையாக வரவேற்கிறது. இதனை அரசியல் மயமாக்காது கையாள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாமும் உள்ளோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். அதேபோல் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழான அண்மைக்கால கைதுகளையும் இணைத்துக் கொண்டு அவர்கள் குறித்தும் கவனம் செலுத்தியாக வேண்டும் என்றார். இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான், அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இந்த உண்மைகளை விளங்கிக்கொண்டு இவ்வாறான தீர்மானம் ஒன்றை முன்வைத்தமையை நாம் வரவேற்கின்றோம்.அதேபோல் ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட நபர்கள் குறித்தும் கவனம் செலுத்தியாக வேண்டும் என்றார்.
இதேவேளை, கடந்த ஒரு வருட காலத்தில் நூறுக்கும் அதிகமான இளைஞர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.முகப் புத்தகத்தில் கருத்துக்களை கூறியதற்காக கூட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.