January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாகாண சபைகளின் கீழ் உள்ள வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சு நிதி ஒதுக்காது; அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி

மாவட்டங்கள் விரும்பாது விட்டால் வைத்தியசாலைகளை எமது பொறுப்பில் எடுக்க மாட்டோம்.அதேவேளை மாகாண சபைகளின் கீழ் உள்ள வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கவும் மாட்டாது என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கில் மாகாண சபையின் கீழுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,மன்னார் வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் எடுக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யவே அவ்வாறு மத்திய அரசின் கீழ் எடுக்கப்படுவதாக காரணம் கூறப்படுகின்றது.ஆனால் உண்மையான நோக்கம் அதுவாக இருக்க முடியாது.இந்த வைத்தியசாலைகளை இதுவரை மாகாண சபைதான் அபிவிருத்தி செய்து வந்தது.வடக்கில் மாகாண சபையின் கீழுள்ள கிளிநொச்சி,முல்லைத்தீவு, வவுனியா,மன்னார் வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் எடுப்பதனை ஏற்க முடியாது. அரசிலுள்ள வடக்கு மாகாண பிரதிநிதிகள் கூட இதனை ஏற்க மாட்டார்கள் என்றே நான் கருதுகின்றேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் போதே மாவட்டங்கள் விரும்பாது விட்டால் நாம் வைத்தியசாலைகளை எமது பொறுப்பில் எடுக்க மாட்டோம். அவர்களே அதனை வைத்திருக்க முடியும். அதேவேளை மாகாண சபைகளின் கீழ் உள்ள வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சு மூலம் நிதி ஒதுக்கப்பட மாட்டாது என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்