July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு கோப் குழு அழைப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்,இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் உள்ளிட்ட சில நிறுவனங்களை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) முன்னிலையில் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற கோப் குழு உறுப்பினர்களின் விசேட கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.

கொவிட் தொற்று நோய் சூழலில் திட்டமிட்டபடி கூட்டங்களை நடத்த முடியாமல் உள்ளமை மற்றும் எதிர்வரும் காலத்தில் கூட்டங்களை நடத்திச் செல்லும் முறை தொடர்பில் தீர்மானிப்பதற்காக இக்கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.இதற்கமைய எதிர்வரும் ஜூலை 6 ஆம் திகதி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தையும்,ஜூலை 7ஆம் திகதி இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் தொடர்புபட்ட நிறுவனங்களையும் கோப் குழு முன்னிலையில் அழைப்பதற்கும் இக்குழுவின் உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

இதன்போது, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் கீழ் உள்ள லிட்ரோ காஸ் லங்கா நிறுவனம் மற்றும் லிட்ரோ காஸ் டேர்மினல் லங்கா நிறுவனம் ஆகியவற்றின் தற்போதைய நிலைமைகள் குறித்து விசாரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மேலதிகமாக ஜூலை 8 ஆம் திகதி முதல் கடந்த காலத்தில் அழைக்க முடியாமல் போன நிறுவனங்களை மீண்டும் அழைப்பதற்கு கோப் குழுவின் உறுப்பினர்கள் இதன்போது இணக்கம் தெரிவித்தனர்.