
நீண்டகால தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மற்றும் தண்டனை பெற்றும் தண்டனைக் காலத்திற்கும் அதிகமான காலம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகளுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் இன்று (22) தெரிவித்திருந்தார்.
இளைஞர் விவகார அமைச்சின் கீழான விசேட அறிவிப்பொன்றை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சபையில் முன்வைத்தார்.
இதன்போது அவர் கூறுகையில், சில குற்றச்சாட்டுகளில் பிணை பெற்றுக் கொள்ள முடியாது, தமது வழக்குகளை முடித்துக் கொள்ள முடியாமலும் அதிகளவான இளைஞர்கள் சிறைச்சாலைகளில் உள்ளனர்.
அதேபோல் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் சிறைச்சாலைகளில் அதிகமான நபர்கள் நீண்டகாலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்
ஆகவே நீண்ட காலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு வழக்கு விசாரணைகளின் பின்னர் தண்டனை பெற்று வரும் நபர்கள் 35 பேர் உள்ளனர்.
ஆனால் இவர்களில் அதிகமானவர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை காலத்தை விடவும் அதிகமான காலம் சிறைகளில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இன்னமும் விசாரிக்கப்பட்டு வருகின்ற வழக்குகள் 38 உள்ளன. 20 ஆண்டுகளுக்கு மேலான காலமாக இவர்களுக்கு வழக்கு விசாரிக்கப்பட்டு வருகின்றது.
எந்தவித வழக்கும் தொடுக்காது 13 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் விசாரணைகள் முடிவடைந்தும் குற்றப்பத்திரிகை தொடுக்காது 116 பேர் உள்ளனர்.
இவர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகள், ஆனால் நீண்ட காலமாக இவர்கள் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஒன்றில் இவர்கள் மீதான வழக்குகளை விசாரித்து தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும், இல்லையேல் குற்றப்பத்திரம் தொடக்க வேண்டும். அல்லது விடுவிக்கப்பட வேண்டும்.மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் 12 ஆயிரம் பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தி விடுவிக்கப்பட்டனர்.
அவர்களில் மூவாயிரத்து ஐநூறு பேருக்கு சிவில் பாதுகாப்பு படையணியில் அரச வேலையும் பெற்றுக்கொடுத்தோம்.
தற்போது வரையில் சிறையில் உள்ள ஒரு சிலரது சிறைக்காலம் எனது வயதை விடவும் கூடியது. எனவே இவர்களுக்கு நியாயம் நிறைவேற்றப்பட வேண்டும்.
இந்த நபர்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டுமென நீதி அமைச்சரிடம் கேட்டுக் கொள்கிறேன். புனர்வாழ்வுக்கு உட்படுத்தியேனும் அவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கூறினார்.