பேஸ்புக்கில் கருத்துக்களை வெளியிட்ட 100 க்கு அதிகமான இளைஞர்கள் கடந்த ஆண்டு முதல் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இளைஞர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றங்களில் அவர்கள் ஈடுபடவில்லை என்றும் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
“30 ஆண்டுகளுக்கு அதிகமான காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் இருப்பதை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று கவனத்துக்கு கொண்டுவந்தார்.
இந்த குழந்தைகள் பிணையில் விடுவிக்கப்பட வேண்டும். ஏனெனின், பயங்கரவாத தடைச் சட்டம் தேவையற்றது.
நேற்று பிரதீபன் என்ற இளைஞன் பேஸ்புக் மூலமாக அரசியல் கட்சியொன்றை ஸ்தாபிக்க முயன்றதாக கைது செய்யப்பட்டார். எனினும் இன்று அரசாங்கம் அவரை குற்றவாளியாக சித்தரித்துள்ளது” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிள்ளையான் எனும் பாரதூரமான குற்றத்தைச் செய்தவர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பாவி இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
கைதிகளை முறையான விதமாக விடுதலை செய்வதற்காக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை சீர்குலைக்க சாணக்கியன் எம்.பி முயற்சிப்பதாக அமைச்சர் நாமல் குற்றம்சாட்டியுள்ளார்.
வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் இருக்கும் போது, சாணக்கியன் ஏன் நேற்று கைது செய்யப்பட்டவர்களைப் பற்றி பேசுகிறார்? என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.