July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பணியிடங்களில் துன்புறுத்தப்படுவதாக பெண் ஊடகவியலாளர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் ஊடக அமைச்சு விசாரணை!

இலங்கையில் பெண் ஊடகவியலாளர்கள் தமது பணியிடங்களில் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஊடக அமைச்சு விசாரணைகளை மேற்கொள்ளும் என கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

சில பெண் ஊடகவியலாளர்கள் தாம் பணியிடங்களில் உயர் நிலையில் உள்ள ஆண் அதிகாரிகளினால் துன்புறுத்தப்பட்டு வருவதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஒரு பெண் ஊடகவியலாளர் தனது சக ஊழியரால் துன்புறுத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதை தொடர்ந்து பல பெண் ஊடகவியலாளர்களும் தாமும் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவிட்டனர்.

இதையடுத்து #MeToo இயக்கம் சமூக ஊடகங்களில் வலுவான ஆதரவை பெற்றுள்ளது.இதுவரை இந்த ஹேஸ்டெக் ஊடாக 3,928 டுவிட்டர் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று (22) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த விடயம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

​​இந்த விடயம் தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை என தெரிவித்த ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இருப்பினும், இது குறித்து ஊடக அமைச்சு விசாரணைகளை நடத்தும் என கூறியுள்ளார்.

69 வயதான ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டை ஹாலிவுட் நடிகையான அலிஸ்ஸா, #MeToo என்ற ஹேஸ்டெக்கை பயன்படுத்தி பதிவிட்டார்.

பல பெண்கள் அவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக பதிவிட்டதையடுத்து #MeToo இயக்கம் முதலில் தொடங்கப்பட்டது. விசாரணைகளையடுத்து அவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.