January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உணவு பொதியிட பயன்படுத்தப்படும் அனைத்து வகையான பொலித்தீன்களையும் தடைசெய்ய சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை!

இலங்கையில் பொலித்தீன் பயன்பாட்டால் பாரிய சூழல் சீர்கேடு இடம்பெற்றுள்ளதால், உணவு பொதியிட பயன்படுத்தப்படும் அனைத்து வகையான பொலித்தின்களையும் (லஞ்ச் சீட்) தடைசெய்வதற்கு சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபை உட்பட பல நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிடாமல் உணவு பொதியிட பயன்படுத்தப்படும் அனைத்து வகையான பொலித்தின்களையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகளுக்கு அமைச்சர் மகிந்த அமரவீர அறிவுறுத்தியுள்ளார்.

உணவு பொதியிடலின் போது பொலித்தீன் பயன்பாட்டை தடை செய்ய அரசாங்கம் கடந்த காலங்களில் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை ஆராய்ந்ததன் பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“துரதிர்ஷ்டவசமாக, உணவு பொதியிடும் பொலித்தீன்களை இன்னமும் பயன்படுத்தும் ஒரே நாடு இலங்கைதான்.நாட்டின் நான்கு பெரிய நிறுவனங்கள் மாதத்திற்கு ஏழு முதல் எட்டு டொன் மதிய உணவு தாள்களை உற்பத்தி செய்கின்றன.

கடந்த அரசாங்கத்தின் போது, இது குறித்து உணவு பொதியிடல் பொலித்தீன்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்ட நிலையில், அவர்கள் விரைவாக மக்கக் கூடிய பொலித்தீன்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.

எனினும் இதுவரை அதற்கான எந்த முயற்சிகளையும் அவர்கள் எடுக்கவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆண்டுதோறும், புள்ளிவிவரங்களின்படி, கிட்டத்தட்ட 106 டன் பொலித்தீன்கள் உணவு பொதியிடலுக்காக பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு நாளும் 10 மில்லியனுக்கும் அதிகமான உணவு பொதியிட பயன்படுத்தப்படும் பொலித்தீன்கள் நாட்டின் சூழலில் வெளியேற்றப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவை சிதைவடைய இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகும்.

“மதிய உணவுத் தாள்களின் விளைவாக மண்ணில் சேரும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றும் சுற்றாடல் அமைச்சர் அமரவீர மேலும் கூறினார்.