Photo: Sri Lanka Customs Facebook
சட்டவிரோதமாக பொருட்களை இறக்குமதி செய்கின்றவர்கள் சுங்கத் திணைக்களத்தால் கைது செய்கின்ற போது விதிக்கப்படுகின்ற அபராதத்தை செலுத்தாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதனால் அரசாங்கத்துக்கு 6,300 கோடி ரூபாவுக்கும் அதிகமான வருமான இழப்பு ஏற்படுவதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக விதிக்கப்பட்ட அபராத தொகையை குறித்த நபர்கள் செலுத்தாததே இதற்கு முக்கிய காரணம் என்று சுங்க திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
6,300 கோடி ரூபா மதிப்புள்ள சில வழக்குகள் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றுள் பல சட்டவிரோத பொருட்களும் உள்ளடங்கும்.
எனவே, இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சுங்கத் திணைக்களத்துக்கு அபராதம் செலுத்துவதை தவிர்ப்பதற்கு நீதிமன்றங்களை பயன்படுத்துவது ஒரு வழக்கமாக மாறிவிட்டதாக அந்த அதிகாரி கூறினார்.
அதுமாத்திரமன்றி, சுங்கத் திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட பின்னர் அவர்கள் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வார்கள் என்றும், அந்த வழக்குகளில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதால் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானம் தாமதமாக கிடைப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சட்டவிரோதமாக கழிவுத் தேயிலை ஏற்றுமதி செய்வது, பீடி இலைகளை இறக்குமதி செய்வது உள்ளிட்ட விடயங்களுக்கு அபராதமாக விதிக்கப்பட்ட 10 கோடி ரூபா பணம் கிடைக்க வேண்டியிருப்பதாகவும், இந்த நிலைமைக்கு தீர்வினை பெற்று கொடுக்க அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என்று அந்த அதிகாரி கூறினார்.
அத்துடன், சட்டவிரோதமாக கழிவுத் தேயிலை ஏற்றுமதி செய்ய முயன்ற ஒருசில சம்பவங்களுக்கு பல இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்ட பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்த ஒருவர் அண்மையில் கழிவுத் தேயிலையை மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கான முயற்சியில் கைது செய்யப்பட்டார் என அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, இவ்வாறான குற்றவாளிகளை தண்டிப்பது மாத்திரமல்லாது, அரசாங்கத்திற்கு வருமானம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பது மிக முக்கியமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.