July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தடுப்புக் காவலில் உள்ளவர்கள் உயிரிழப்பது தொடர்பாக ஐநா குற்றச்சாட்டு ஆதாரமற்றது’: அரசாங்கம்

இலங்கையில் பொலிஸ் தடுப்புக் காவலில் இருக்கும் போது உயிரிழப்பவர்கள் குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள், ஆதாரங்கள் அற்றவை என்று அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் கருத்து தொடர்பாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளின் மரணங்கள் தொடர்பில் இலங்கை மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஐநா ஆணையாளரின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அரசாங்கம் பல்வேறு கட்டங்களிலும் தெளிவுபடுத்தியுள்ளதாகவும், அவை நிரூபிக்கக்கூடிய விடயங்கள் அல்ல என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

தவாறான நிலைப்பாடுகள் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இது விடயமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் வெளியுறவு அமைச்சு ஆராய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.