July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை- இந்திய பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பாக இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் கலந்துரையாடல்

இலங்கை மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர்கள் இருவரும் இணையவழி கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையின் ‘போர்ட் சிட்டி’ திட்டத்தில் இந்தியாவுக்குள்ள சவால்கள் பேசுபொருளாக மாறியுள்ள நிலையிலேயே, இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு போன்றவற்றைப் பலப்படுத்திக்கொள்வது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தெற்காசியாவின் ஏழு நாடுகளை உள்ளடக்கிய பிம்ஸ்டெக் மற்றும் இந்தியாவின் ஐஓஆர்ஏ பிராந்திய பொறிமுறைகள் தொடர்பாக நெருங்கிய தொடர்புகளைப் பேணவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் கொழும்பு துறைமுக நகர திட்டம் இலங்கை- இந்திய உறவில் சந்தேகத்தையும் அவதானத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாம் போர்ட் சிட்டி திட்டம் மற்றும் இலங்கையில் சீனாவின் நகர்வுகள் குறித்து கவனமாக இருப்பதாக இந்திய கடற்படைத் துணைத் தளபதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இரு நாடுகளுக்குமான உறவைப் பலப்படுத்திக்கொள்வதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோரது சந்திப்பு அமைந்துள்ளது.