இலங்கையில் காணாமல் போனவர்கள் அலுவலகம் இழப்பீட்டு அலுவலகத்திற்கான சமீபத்தைய நியமனங்கள் மற்றும் சமீபத்தைய பயங்கரவாத தடை சட்டவிதிமுறைகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்செலெட் தன்னுடைய கரிசனையை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 47 வது அமர்வில் ஆரம்ப உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் முஸ்லீம்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என கருதப்படுபவை குறித்தும் தமிழர்கள் துன்புறுத்தப்படுவது குறித்தும் நான் கரிசனை கொண்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் சூழமைவில் தமிழர்கள் துன்புறுத்தப்படுவது குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காணாமல் போனவர்கள்,இழப்பீட்டு அலுவலகங்களிற்கான சமீபத்தைய நியமனங்கள் குறித்து நான் கரிசனை கொண்டுள்ளேன். கடந்தகால குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதை ஊக்குவிக்காத நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கைகளை மேலும் பாதிக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு விதிமுறைகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது கரிசனத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த விதிமுறைகள் பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் கீழ் 300 முஸ்லீம்கள், தமிழர்களை தடுத்து வைக்க உதவியுள்ளன.இவை நல்லிணக்கத்தை முன்னெடுக்க உதவப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதமயப்படுத்தப்பட்டவர்களை அதிலிருந்து விடுவிப்பதற்காக நீதிமன்ற நடவடிக்கைகள் இன்றி இரண்டு வருடம் தடுத்து வைப்பதற்கு இந்த விதிமுறைகள் வழிவகுக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.