October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேர்தல் சட்டங்கள்,தேர்தல் முறைமை மறுசீரமைப்பு: முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் காலம் ஜூலை 15 வரை நீடிப்பு

photo:ParliamentLK_twitter

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பில் பொருத்தமான சீர்திருத்தங்கள் குறித்த முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை ஜூலை 15 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாக பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும்,தேவையான திருத்தங்களை பரிந்துரைப்பதற்கும் நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற குழு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய குறித்த தினத்துக்கு முன்னர் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு அக்குழுவின் தலைவர் சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்மொழிவுகளை sec.pscelectionreforms2021@parliament.lk என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாக அல்லது செயலாளர், பாராளுமன்ற விசேட குழு, இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிவைக்க முடியும்.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமைகளை மறுசீரமைப்பது தொடர்பான பாராளுமன்ற விசேட குழுவுக்கு இதுவரை கிடைத்துள்ள முன்மொழிவுகளின் எண்ணிக்கை 94 ஆகும் என இக்குழுவின் செயலாளரும், பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர இக்குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.

முன்னெடுக்கப்படும் தேர்தல் மறுசீரமைப்புக்கு அமைய எதிர்வரும் தேர்தல்களை கலப்பு முறையின் கீழ் முன்னெடுப்பதற்கும் குழு இணக்கம் தெரிவித்தது. இந்தக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு உள்ளூராட்சி சபைகள், மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்றத்துக்கான தேர்தல் முறைகளில் மாற்றங்களை மேற்கொள்வது குறித்த கலந்துரையாடல்களை முன்னெடுக்கவும் இங்கு இணங்கப்பட்டது.

முன்மொழிவுகளை வழங்குபவர்களிடமிருந்து வாய்மொழிமூல சான்றுகளை பெற்றுக் கொள்ள குழு விரும்பினால் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நேரத்தில் குழுவின் முன் ஆஜராகுமாறு அழைக்கப்படுவர் என்றும் இக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.