இலங்கை முழுவதும் இரண்டு ஆண்டுகளில் தொலைத் தொடர்பு மற்றும் இணைய சேவையை விஸ்தரிக்க ஒரு தேசிய திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்க உள்ளதாக டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நிறுவன மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் தகவல் தொலைத் தொடர்பு கோபுரங்களை அமைக்கும் அதேவேளை, ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு வசதிகள் மற்றும் இணைய அணுகலை வழங்க உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
கடந்த பல ஆண்டுகளாக ஒரு தேசிய திட்டமிடலின்றி தகவல் தொலைத் தொடர்பு கோபுரங்களை நிர்மாணிப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டதன் விளைவாக நாட்டின் பல பகுதிகளில் தொலைத் தொடர்புக்கான வெற்றிடம் உருவாகியுள்ளது.
தேசிய திட்டத்தின் படி நாட்டின் அனைத்து பகுதியிலிருந்தும் தகவல் தொடர்பு வசதிகளை பெறுவதற்கான தொலைத் தொடர்பு கோபுரங்களை அமைப்பதன் மூலம் இந்த பிரச்சினையை சரிசெய்ய முடியும்.
இதற்கமைய அனைத்து தகவல் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் கூட்டுத் திட்டம் ஒன்றை முன்னெடுப்பது பொருத்தமானது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் கிராமங்களுக்கும் டிஜிட்டல் வசதிகளை புதுப்பிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக இரத்தினபுரி மாவட்டத்தில் தொலைத் தொடர்பு கோபுரங்களின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அடுத்த சில வாரங்களுக்குள் குருநாகல் மாவட்டத்தில் 49 தொலைத் தொடர்பு கோபுரங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் மாத்தறை உட்பட பத்து மாவட்டங்களுக்குள் தொலைத் தொடர்பு கோபுரங்களை நிர்மாணிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.