நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்று நிலைமை காரணமாக பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான உறுதியான திகதியை கூற முடியாது என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இணையத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதனை மேலும் விரிவுபடுத்த உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இன்று (21) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இணையம் ஊடாகவும் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடாகவும் குருகெதர, இ தக்ஸலா உள்ளிட்ட கல்வி நிகழ்ச்சிகளை பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கற்றல் முகாமைத்துவ முறைமையின் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களை அணுகுவதற்கு இ.தக்ஸலா ஊடாக ‘மெய்நிகர் வகுப்பறை’ அமைத்துள்ளனர். இ தக்ஸலா இணையத்தளத்தை அணுக கட்டணம் அறிவிடப்படாது.
இ-தக்ஸலாவில் 65,000 பாடங்கள் உள்ளன.மேலும் ஒரு நாளைக்கு 200,000 பேர் இதை அணுகலாம். கடந்த மாதம் 3.5 மில்லியன் பேர் இதன் மூலம் பயனடைந்துள்ளனர் என்றார்.
எனினும் பல்வேறு காரணங்களால் நாட்டின் 12% மாணவர்கள் இணையத்தின் ஊடாக கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது உள்ளதாகவும் கல்வி அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
இது போன்ற வசதிகளைப் பெற முடியாத மாணவர்களுக்கு ‘பிராந்திய கற்றல் மையங்கள்’ அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இணையம் மற்றும் தொலைக்காட்சி ஊடாக வழங்கப்படும் மாணவர்களுக்கான கல்வி நிகழ்ச்சிகள் கல்வித் தர மேம்பாடு மற்றும் தேசிய கல்வி நிறுவனத்தின் முன் தரப்படுத்தலுக்கு உட்பட்டவை என்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.