இலங்கையில் இன்று (21) பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ளமைக்கு அமைவாக, புதுப்பிக்கப்பட்ட கொவிட் கட்டுப்பாட்டு சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
இந்த புதிய விதிகளின் படி, மேல் மாகாணத்திற்குரிய வழிகாட்டுதல்களில் ஊழியர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பில் ஐந்து விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.
அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற சேவைகளுக்குள் அடங்கும் அமைச்சுக்கள், நிறுவனங்கள் மற்றும் பகுதிநிலை அரச நிறுவனங்களின் பணியிடங்கள் மற்றும் பொது போக்குவரத்துகளை கருத்தில் கொண்டு இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி, அத்தியாவசிய சேவைகளின் கீழ் வரும் அரசு நிறுவனங்கள், சுகாதார வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய பணியிடத் திறனை அடிப்படையாக கொண்டு அத்தியாவசியமற்ற சேவைகளின் கீழ் ஊழியர்களையும் அதிகாரிகளையும் மட்டுமே அனுமதிக்க முடியும்.
அத்தியாவசியமற்ற சேவைகளின் கீழ் வரும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தமது ஊழியர்களையும் அதிகாரிகளையும் வாரத்திற்கு அதிகபட்சம் இரண்டு நாட்கள் அலுவலகத்திற்கு அனுமதிக்க முடியும்.
அத்தோடு, அத்தியாவசியமற்ற சேவைகளின் கீழ் உள்ள நிறுவனங்கள் வீடுகளில் இருந்து தங்கள் கடமைகளை செய்ய முடியாவிட்டால் மட்டுமே பணியிடங்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.அதே நேரத்தில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அலுவலகத்தினால் போக்குவரத்து வழங்கப்பட வேண்டும்.
மேல் மாகாணத்தில் பொது போக்குவரத்து அத்தியாவசிய சேவைகளின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
இதேவேளை, தனியார் நிறுவனங்கள் இந்த காலகட்டத்தில் முடிந்தவரை வீட்டுகளில் இருந்து வேலை மற்றும் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஊக்குவிக்க வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.