November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தவறான கொரோனா புள்ளி விபரங்களை வெளியிட்டதாக வைத்திய நிபுணர் சுதத் சமரவீரவுக்கு எதிராக முறைப்பாடு!

இலங்கை தொற்று நோயியல் பிரிவின் முன்னாள் தலைமை நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர உள்ளிட்ட தரப்பு கொரோனா தொற்று தொடர்பில் தவறான புள்ளி விவரங்களை சமர்ப்பித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் வழக்கறிஞர் அருண லக்ஸிரி உனவடுன, பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

முன்னாள் தலைமை தொற்று நோயியல் நிபுணர் மற்றும் அந்த பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்ட குழு தமது கடமைகளை  செய்யத் தவறியதன் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களின் எண்ணிக்கைகளை தமது விருப்பத்தின் படி மாற்றி வெளியிட்டதன் ஊடாக , தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்தியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தண்டனைச் சட்டம் 289 பிரிவின் படி வைத்திய நிபுணர் சுதத் சமரவீர உள்ளிட்ட தரப்புக்கு எதிராக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்தோடு உயிரிழந்தவர்கள் அனைவரும் உண்மையிலேயே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்றும், முன்வைக்கப்பட்ட புள்ளி விவரங்கள் சரியானதா என்றும் விசாரணை நடுத்தும்படியும் வழக்கறிஞர் அருண லக்ஸிரி உனவடுன கோரியுள்ளார்.

இதனிடையே, இரு தினங்களுக்கு முன்னர் வைத்திய நிபுணர் சுதத் சமரவீரவுக்கு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.