
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக ஒரு மாதமாக அமுலிலிருந்த பயணக் கட்டுப்பாடுகள் இன்று (21) அதிகாலை 4 மணிமுதல் தளர்த்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், நாட்டின் பல நகரங்களிலும் அடகு கடைகள் மற்றும் வங்கிகளின் அடகுப் பிரிவுகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றமையை காணக் கூடியதாக உள்ளது.
பயணக் கட்டுப்பாடுகளின் போது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், நாட்டின் பெரும்பாலான மக்கள் வீடுகளில் இருக்க நேரிட்டது.
இந்த கால கட்டத்தில் எந்த வருமானமும் கிடைக்காததனால் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு கூட முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து தம்மிடம் உள்ள தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் அடகு கடைகளின் முன் காத்திருக்கின்றமை தெரிய வந்துள்ளது.
இதனிடையே, நாட்டில் இன்னும் கொரோனா தொற்று கட்டுக்குள் வராத நிலையில், பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.