July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவின் டெல்டா வகை கொவிட் தொற்றுடன் மாதிவெல பகுதியில் ஒருவர் அடையாளம்!

மாதிவல – பிரகதிபுர பகுதியில் டெல்டா வைரஸினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளதை தொடர்ந்து அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

டெல்டா வைரஸுடன் நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார் என்பதற்கான ஆரம்பகட்ட அறிகுறிகளே தென்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, டெல்டா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்ற தொற்றாளரின் மாதிரிகளை மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், குறித்த பகுதியில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, கொழும்பு, தெமட்டகொட ஆராமய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கமைய, அதிக வீரியம் கொண்ட டெல்டா கொவிட் திரிபுடன் கூடிய 5 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இலங்கையில் டெல்டா திரிபுடன் கூடிய தொற்றாளர்கள் சமூகத்திலிருந்து அடையாளம் காணப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதனையடுத்து, அப் பிரதேசத்தை தனிமைப்படுத்தி, குறித்த தொற்றாளர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் உள்ளிட்ட நபர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், சுகாதார அமைச்சரின் அறிவுறுத்தலுக்கமைய, நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் வீரியம் மிக்க டெல்டா திரிபு பரவியுள்ளதா என கண்டறிய விசேட பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.