July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நெருக்கடிகளை சமாளிக்க ஆளுங்கட்சி பாராளுமன்றக் குழு இன்று கூடுகிறது!

எரிபொருள் விலை உயர்வை அடிப்படையாகக் கொண்டு அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்க அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தின் நிலைப்பாட்டில் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் பலர் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அரசாங்கத்திற்குள் நீடிக்கும் குழப்பங்களை தீர்க்கும் விதமாக ஆளும் கட்சி பாராளுமன்ற குழுக்கூட்டம் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.

எரிபொருள் விலை உயர்வை அடுத்து அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சுப்பதவியை துறக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் எழுத்துமூலம் அறிவித்ததை அடுத்து ஆளும் கட்சிக்குள் பிளவுகள் இருப்பது வெளிப்பட்டுள்ளது.

இந்நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினர் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை கொண்டுவரவுள்ளனர்.

நாளை 22 ஆம் திகதி குறித்த பிரேரணையை சபாநாயகரிடம் ஒப்படைக்கவுள்ளதாக எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து வாக்களிக்க ஆளும் கட்சியின் சகல பங்காளிக்கட்சிகளும் தீர்மானித்துள்ளனர்.

சகல பங்காளிக்கட்சிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவர்த்தையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பின்வரிசை உறுப்பினர்கள் இன்னமும் அமைச்சர் உதய கம்மன்பில பதவி விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்களில் அறிந்துகொள்ள முடிகின்றது.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு இல்லாதபோதும் அமைச்சர் உதய கம்மன்பிலவை அமைச்சுப்பதவியில் இருந்து நீக்குவது அவசியம் என்ற கோரிக்கையை ஜனாதிபதி, பிரதமரிடத்தில் முன்வைத்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சாகர தரப்பு கூறுகின்றது.

இந்நிலையில் அரசாங்கத்திற்குள் எழுந்துள்ள முரண்பாடுகளை தீர்க்கும் விதத்திலும், நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஆராயவும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயலாளர் சாகர காரியவசத்தின் கோரிக்கைகள் தொடர்பில் ஆராயும் விதமாகவும் ஆளும் கட்சி பாராளுமன்றக்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது