November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒரு மாதத்தின் பின்னர் நாடு திறக்கப்பட்டது: ஜுலை 5 வரையில் சில கட்டுப்பாடுகள் தொடரும்!

இலங்கை முழுவதும் ஒரு மாத காலமாக அமுலில் இருந்த பயணக் கட்டுப்பாடு இன்று அதிகாலை 4 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துத் தடை மற்றும் கொவிட் தடுப்பு தொடர்பான ஏனைய ஒழுங்குவிதிகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று கொவிட் தடுப்புச் செயலணி தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக மே 21 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாட்டை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

தற்போது கொவிட் தொற்று அச்சுறுத்தல் நிலைமை ஓரளவுக்கு குறைந்துள்ளதால் இன்று முதல் கட்டுப்பாட்டை தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் எதிர்வரும் 24 ஆம் திகதி பௌர்ணமி விடுமுறை தினம் என்பதனால் அன்றைய தினத்தில் முழு நேர பயணக் கட்டுப்பாட்டை விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி 23 ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாட்டை தளர்த்திய பின்னர் மக்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குவிதிகள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று முதல் ஜுலை 5 ஆம் திகதி வரையில் அந்த ஒழுங்குவிதிகள் அமுலில் இருக்கும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி வீட்டில் இருந்து இருவருக்கு மாத்திரமே வெளியில் செல்ல முடியும்.

பொதுப் போக்குவரத்து சேவைகளில் ஆசன எண்ணிக்கையில் 50 வீதம் வரையிலானோரே பயணிக்க முடியும். அத்துடன் வாடகை வாகனங்களில் இரண்டு பயணிகளையே ஏற்றிச் செல்ல முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட மக்கள் ஒன்றுகூடும் அனைத்து நிகழ்வுகளும் தடை செய்யப்பட்டுள்ளன. மரண சடங்குகளின் போது 15 பேருக்கு மாத்திரமே கலந்துகொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை கொவிட் தொற்று அச்சுறுத்தல் உள்ள பல பிரதேசங்கள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.