January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விருந்துபசாரம் ஏற்பாடு செய்த லிந்துலை நகர சபைத் தலைவர் உட்பட 7 பேர் கைது!

பயணக் கட்டுப்பாடு விதிகளை மீறி விருந்துபசாரம் ஒன்றை ஏற்பாடு செய்த சந்தேகத்தின் பேரில் லிந்துலை நகர சபைத் தலைவர் உட்பட 7 பேரை தலவாக்கலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சில ஆதரவாளர்களுடன் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் விருந்துக்கு ஆயத்தமான போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விருந்துபசாரம் குறித்து 119 அவசர பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றபோது விருந்தில் கலந்து கொண்டிருந்த சிலர் தப்பி ஓடிவிட்டதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

அத்தோடு லிந்துலை நகர சபைத் தலைவர் விருந்தில் கலந்து கொள்வதற்கு சென்றிருந்த நகர சபைக்கு சொந்தமான கெப் ரக வண்டியையும் பொலிஸார் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நுவரெலிய மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதுடன், இவர்களை தனிமைப்படுத்துவது தொடர்பில் லிந்துலை சுகாதார பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.