இலங்கை முழுவதும் நாளை முதல் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் மக்கள் பின்பற்ற வேண்டிய ஒழுங்கு விதிகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
ஜுன் 21 ஆம் திகதி முதல் ஜுலை 5 ஆம் திகதி வரையில் இந்த ஒழுங்கு விதிகள் அமுலில் இருக்கும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த ஒழுங்கு விதிகளில் சில, மேல் மாகாணத்திற்கு என்று தனியாக விதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி நாளை முதல் வீட்டில் இருந்து இருவருக்கு மாத்திரமே வெளியில் செல்ல முடியும். அத்துடன் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாடகை வாகனங்களில் ஒரே நேரத்தில் இரண்டு பயணிகளுக்கு மாத்திரமே பயணிக்க முடியும்.
அதேபோன்று பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளில் ஆசன எண்ணிக்கையில் 50 வீதமான பயணிகளையே ஏற்றிச் செல்ல முடியும்.
மற்றைய மாகாணங்களில் பொது மக்களுக்கு பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த முடியும் என்றாலும், மேல் மாகாணத்தில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே அதனை பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அலுவலக ரீதியிலான கூட்டங்களை நடத்துவதற்கு மற்றைய மாகாணங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும், மேல் மாகாணத்தில் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அத்துடன் அனைத்து மாகாணங்களிலும் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மணமகன், மணமகள் அடங்கலாக 10 பேருடன் பதிவுத் திருமணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை மரணங்களின் போது 24 மணி நேரத்திற்குள் இறுதிக் கிரியைகளை நடத்த வேண்டும். இறுதிக் கிரியையில் 15 பேருக்கு மட்டுமே கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விழாக்கள், வழிபாட்டு நிகழ்வுகள் உள்ளிட்ட ஆட்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளும் நாடுபூராகவும் தடை செய்யப்பட்டுள்ளன.
அதேபோன்று திரையரங்குகள், இரவுநேர களியாட்ட விடுதிகள் ஆகியனவும், ஆலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு இடங்களும் மூடப்பட்டிருக்கும் என்றும் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.